இலங்கையின் கிழக்கு கடலில் தீ விபத்துக்கு உள்ளான எம்டி நியு டயமன்ட் (MT New Diamond) கப்பல் தலைமை மாலுமிக்கு வெளிநாடு செல்வதற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் இலங்கை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அது தொடர்பாக நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்பித்துள்ளனர்.
கப்பலில் தீ ஏற்பட்ட போது அதனை கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்க வேண்டிய தானியங்கி முறையை செயற்படுத்தாமை , விபத்து தொடர்பாக சமிக்ஞை மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அறிவிக்காமை ஆகிய குற்றச்சாட்டுகள் கிரேக்க நாட்டை சேர்ந்த தலைமை மாலுமிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய அவர் இன்று நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இதன்போது, அவருக்கு வெளிநாடு செல்வதற்கு தடைவிதித்த நீதிமன்றம், அவர் தங்கியிருக்கும் முகவரியில் மாற்றம் இருக்குமாயின் அது தொடர்பாக நீதிமன்றத்திற்கு அறிவிக்க வேண்டுமென்று அவருக்கு அறிவித்துள்ளது.