January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் செயலாளரிடம் காவல்துறை விசாரணை

இலங்கையின் டக்கு-கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜாவிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கொழும்பு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்கு விசாரணைக்கு வருமாறு அண்மையில் அழைப்பு வந்திருந்த நிலையில், சுகவீனம் காரணமாக கொழும்புக்கு சமூகமளிக்க முடியாது தன்னால் முடியாது என தான் அறிவித்திருந்ததாக லீலாதேவி கூறுகின்றார்.

இந்நிலையில் கிளிநொச்சியில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் அலுவலகத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்போது வங்கி கணக்குகள், வங்கிக்கு பணம் பரிமாறப்படுவது உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பிலும் கடந்த காலங்களில் ஜெனிவா சென்றமை, அங்கு பேசப்பட்ட விடயங்கள் என்பன தொடர்பிலும் தன்னிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த விசாரணையின் போது, எமக்கு நீதி கிடைக்கவில்லை, இலங்கை அரசிடம் அழுத்தம் கொடுத்தாவது எமது பிள்ளைகளை மீட்டு தாருங்கள் என்று ஜெனிவா சென்றிருந்தபோது கோரிக்கை முன்வைத்திருந்தேன்” என பதில் அளித்ததாகவும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி தெரிவித்துள்ளார்.