மன்னார் மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் கடமைப் புரியும் சுகாதார ஊழியர்கள் இன்றைய தினம் மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன்பாக இரண்டு நாட்களுக்கு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.
வட மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் கடமைப் புரியும் இலங்கை ஜனரஜ சுகாதார சேவைகள் சங்கத்தின் ஊழியர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டமைக்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தும் முறையற்ற நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைவிரல் அடையாள இயந்திரம் மற்றும் மேலதிக கொடுப்பனவு தொடர்பில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
மேலும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் ஒன்று கூடிய சுகாதார ஊழியர்கள் கருப்பு பட்டி அணிந்து பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் பல்வேறு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டும் உரிய தீர்வு கிடைக்கவில்லை. அதனால் தாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தது வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை தீர்வு கிடைக்கும் வரை தொழிற்சங்க நடவடிக்கைகளை தொடரும் எனவும் குறித்த சுகயீன விடுமுறை போராட்டம் நாளை வியாழக்கிழமையும் தொடரும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.