(FilePhoto)
வடக்கில் மூன்று தீவுகளில் நிர்மாணிக்கவுள்ள மின் உற்பத்தித் திட்டத்தை இந்தியாவிற்கோ அல்லது சீனாவிற்கோ கொடுப்பது குறித்து இறுதித் தீர்மானம் எதனையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை என்று அமைச்சர் டலஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது, உலகின் எந்தவொரு பலமான நாட்டின் கொள்கைத்திட்டத்திற்கும் எமது நாட்டின் தேசிய கொள்கையை பலவீனப்படுத்தி தீர்மானம் எடுக்க மாட்டோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் கீழ் இது குறித்து சர்வதேச விலைமனுக்கோரலுக்கு விடப்பட்டதாகவும், இது இலங்கையின் முதலாவது கலப்பு விலைமனுக்கோரலாகும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு இந்த விலைமனுக்கோரலில் இந்திய நிறுவனம் 12 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அடிப்படையில் இந்த வேலைத்திட்டத்தை பெற்றுக்கொண்டது.
எனவே இந்த விலைமனுக்கோரலில் எந்த தவறும் இல்லை, ஆனால் அமைச்சரவையில் இந்தத் திட்டம் இன்னமும் அங்கீகரிக்கப்படவில்லை, ஏனென்றால் திறைசேரி ஏற்கனவே இந்த திட்டத்தை எவ்வாறு கையாளப்போகின்றது என்ற தொழில்நுட்ப ரீதியிலான தகவல்களை முன்வைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்தியா இந்த திட்டத்திற்காக நிதி உதவியொன்றை செய்யவும் ஆர்வமாக உள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகர் அறிவித்ததாகக் கூறிய அமைச்சர், இந்த திட்டத்தை யாருக்கு வழங்குவது என்பது குறித்து இப்போது வரையில் எந்தவித இறுதித் தீர்மானமும் எடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.