July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பிரபாகரனை கொன்றேன்’ என்ற ஜனாதிபதியின் கூற்றே பெரும் சாட்சியமாகும்: சிறீதரன்

‘பிரபாகரனை கொன்றேன்’ என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ கூறியதே மனித உரிமை மீறலுக்கான பெரிய சாட்சியம், அந்தக் கருத்தை வைத்தே அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸிடம் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி சிவஞானம் ஆகியோருக்கு இடையில் யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதியொன்றில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

ஜெனிவாவில் கொண்டுவரப்பட இருக்கின்ற தீர்மானம் தொடர்பிலும் அதனை எதிர்கொள்வதற்காக ஒருங்கிணைந்த நாடுகளுக்கு உள்ள சவால்கள், தமிழர் தரப்பினரின் பங்களிப்பு மற்றும் ஏனைய நாடுகளுடன் கலந்துரையாட வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் இந்த சந்திப்பில் ஆராயப்பட்டது.

மேலும், பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டம் நடந்து முடிந்த பின்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், தவிசாளர்கள், பொதுமக்கள் போன்றோரை விசாரணை என்ற பெயரில் அரசு அச்சுறுத்தி வருவதாகவும் இதன்போது கூட்டமைப்பின் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன், அண்மையில்  அம்பாறையில் உகுண பிரதெசத்தில் ‘பிரபாகரனை கொன்றதாக’ ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ கூறியதாகவும் அதுவே மனித உரிமை மீறலுக்கான பெரும் சாட்சியம் என்றும் அதை வைத்தே அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அமெரிக்க தூதுவரிடம் சிறீதரன் கூறியுள்ளார்.

இதேவேளை அண்மையில் உலகத் தமிழர் பேரவை, மனித உரிமைகள் மற்றும் உலகளாவிய நீதி மையம், நியூயோர்க் பல்கலைக்கழகம் அமைதி மற்றும் நீதிக்கான இலங்கைப் பிரசாரம் மற்றும் கனேடிய தமிழர் பேரவை ஆகிய அமைப்புகள் இணைந்து இணையவழி கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன்போது, 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த சந்தரப்பத்தில் பாதுகாப்புச் செயலாளராக பணியாற்றிய தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, ‘இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்களை கொலை செய்ததை’ தன்னிடம் ஒப்புக்கொண்டதாக அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் ஸ்டீபன் ராப் குறிப்பிட்டிருந்தார்.

இந்த ஒப்புதலை சாட்சியமாக வைத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸிடம் சுட்டிக்காட்டியதாக பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் குறிப்பிட்டுள்ளார்.