ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு 18 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானமொன்று கொண்டுவரப்படும் போது, குறித்த 18 நாடுகளும் இலங்கையின் நிலைப்பாட்டை ஆதரிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
47 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐநா மனித உரிமைகள் பேரவையில் 18 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகச் செயற்படவுள்ளதாக அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இதுவரையில் சீனா, ரஷ்யா, வியட்நாம் ஆகிய நாடுகள் இலங்கைக்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்துள்ளதோடு, பாகிஸ்தான், மத்திய கிழக்கு நாடுகளின் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றதும் குறிப்பிடத்தக்கது.
யுத்த கால மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் பிரச்சினைகள் குறித்து தீர்மானமொன்றை நிறைவேற்ற பிரதான நாடுகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைத் தடுக்கும் முயற்சியில் இலங்கை ஈடுபட்டு வருகின்றது.
இதேநேரம், ஐநா மனித உரிமைகள் பேரவையின் தொடக்க உரையில், இலங்கை மீதான பிரேரணையை நிராகரிக்குமாறு வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன கேட்டுக்கொண்டுள்ளார்.