
வடக்கு மாகாணத்தில் மூன்று தீவுகளில் முன்னெடுக்கப்படவுள்ள மின் திட்டத்தால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற குற்றச்சாட்டை குறித்த திட்டத்தை முன்னெடுக்கவுள்ள சீன நிறுவனமான சினோசோர்-எடெக்வின் கூட்டு நிறுவனங்கள் நிராகரித்துள்ளன.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள குறித்த நிறுவனங்கள் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளன.
சினோசோர்-எடெக்வின் கூட்டமைப்பின் நற்பெயர் மற்றும் நியாயமான உரிமைகளை கடுமையாக பாதிக்கும் தவறான தகவல்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற தவறான தகவல்கள் இலங்கை அரசாங்கத்தின் நம்பகத்தன்மையையும் உருவத்தையும் சேதப்படுத்தும் என்றும் வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கும் திறனைக் குறைக்கும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. .
மேற்படி தீவுகளில் முன்னெடுக்கப்படவுள்ள மின் திட்டம் சுமார் 10,000 குடியிருப்பாளர்களை இணைத்துக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.ஆசிய அபிவிருத்தி வங்கி மூலம் கடந்த ஆட்சியின் போது கடன் முன்மொழிவு 2015 செப்டம்பரில் சமர்ப்பிக்கப்பட்டது. திட்டத்தின் முக்கிய நோக்கம் காற்று-ஒளிமின்னழுத்த-ஆற்றல் சேமிப்பு கலப்பின மின் உற்பத்தி முறையை உருவாக்குவது, மற்றும் குறித்த தீவுகளில் வசிப்பவர்களுக்கு மின்சார நிலைமைகளை மேம்படுத்துவதை வலுப்படுத்துதல் ஆகும்..
அதற்கமைய இந்த கடன் திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி ஒப்புதல் அளித்ததுடன், செயல்படுத்தும் நிறுவனமாக, இலங்கை மின்சார சபை 2016 இல் திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்தது.
முதல் சர்வதேச ஏலச்சீட்டு செயல்முறை, நவம்பர் 2017 இல் நடைபெற்றபோது ஏலதாரர்கள் யாரும் தகுதிக்கான நிபந்தனைகளுக்கு இணங்காததால் அது வெற்றிபெற்றிருக்கவில்லை.எனவே,மீண்டும் ஏலம் 27 ஜூன் 2019 அன்று கொள்முதல் வழிகாட்டுதல்களுடன் சர்வதேச ஏலதாரர்கள் பங்கேற்று தங்கள் திட்டங்களை சமர்ப்பிக்க ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதித்திருந்தது.
இந்நிலையில் எங்களுடைய நிறுவனம் தனது முன்மொழிவை 18 செப்டம்பர் 2019 அன்று சர்வதேச ஏலதாரராக சமர்ப்பித்த அதேவேளை,20 ஜனவரி 2021 அன்று இலங்கை அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றது.
அதற்கமைய இலங்கை மின்சார சபையின் மேற்பார்வையின் கீழ் இரண்டு ஆண்டுகளுக்குள் திட்டத்தை முடித்து ஒப்படைக்க வேண்டும்.
இந்த மின் திட்டம் மூலம் ஆயிரக்கணக்கான இலங்கையர்களின் வாழ்க்கை மேம்படும் என்று அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
எந்தவொரு மூன்றாம் தரப்பினரின் மூர்க்கத்தனமான தலையீட்டையும் குற்றசாட்டுகளையும் நாங்கள் உறுதியாக எதிர்க்கிறோம். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான சர்வதேச ஏல நடைமுறைகளை இலங்கை அரசாங்கம் கண்டிப்பாக பின்பற்றும் என்றும், ஒப்பந்தக்காரரின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதாகவும்,சொந்த நம்பகத்தன்மை மற்றும் சர்வதேச நற்பெயரைப் பாதுகாப்பதாகவும் அரசாங்கத்தின் முடிவு அமையும் என கூட்டமைப்பு நம்புகிறது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.