இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் தமிழ்க் கட்சிகளின் அழைப்பில் அனுஷ்டிக்கப்படும் ஹர்த்தால் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வாழைச்சேனை பொலிஸ் நிலைய சந்தியில் இன்று போராட்டம் நடந்தது.
“வாழ விடு வாழ விடு நிம்மதியாக வாழ விடு, குழப்பாதே குழப்பாதே நாட்டை குழப்பாதே, அரசியல் சுயநலத்திற்கு தமிழ் மக்கள் பகடைக்காய்களா?, நாம் ஒரே நாடு ஒரே தேசம் என்று ஒன்றுபட்டு வாழ்வோம்” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.
சமகால அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கிலும், கிழக்கில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இந்த ஹர்த்தாலை அனுஷ்டிக்குமாறு அழைப்பு விடுத்த 10 தமிழ்க் கட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியும் தாம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்தனர்.
“தமிழ் அரசியல்வாதிகள் தங்களுடைய அரசியல் இலாபங்களுக்காகவே இந்த ஹர்த்தாலை அனுஷ்டிக்குமாறு கோரியுள்ளனர்.
ஆனால் மக்களின் தேவைகள் அதிகம் உள்ளது. இதற்கு முகம் கொடுக்காமல் மக்கள் மத்தியில் நிம்மதியினை குழப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்கின்றனர்.
நாங்கள் அன்றாட தொழில் செய்து வரும் நிலையில் இவ்வாறு ஹர்த்தாலை போட்டு எங்களின் வயிற்றில் அடிக்காதீர்கள்.
இந்த அரசாங்கத்தின் மூலம் நாம் நிம்மதியாக வாழ்கிறோம், எங்களுக்கு இந்த அரசாங்கம் பூரண ஆதரவாக உள்ளது”
-என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்தனர்.
இந்த ஹர்த்தால் எதிர்ப்புப் போராட்டத்தில் வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.தர்மலிங்கம் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.