November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மத்திய வங்கி பிணைமுறி ஊழலால் இலங்கைக்கு ‘145 பில்லியன் ரூபா நட்டம்’

மத்தியவங்கி பிணைமுறி ஊழல் காரணமாக நாட்டின் பொருளாதாரத்தில் ‘145 பில்லியன் ரூபா நட்டம்’ ஏற்பட்டுள்ளதென தாம் கருதுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த ஊழல் குறித்த விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து பிரதான குற்றவாளியை கண்டறிய வேண்டும் எனவும், மோசடி குறித்த விசாரணைகள் பல இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

கடந்த 2015 பெப்ரவரி 1 ஆம் திகதி தொடக்கம் 2016 மார்ச் 31 ஆம் திகதி வரையிலான பிணைமுறி கைமாறல்கள் மூலமாக பர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனம் 8.529 பில்லியன் ரூபா இலாபம் ஈட்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த தொகையானது மறுபக்கம் அரசாங்கம் மற்றும் அரச நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நட்டமாக கருதப்படுவதுடன் நான்காம் கணக்காய்வு அறிக்கைக்கு அமைய அரசாங்கத்திற்கு 6.6 பில்லியன் ரூபாவிலிருந்து 9.6 பில்லியன் ரூபா வரையில் நட்டமாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது என்றார்.

நாட்டின் பொருளாதாரத்திற்கும் ஏற்பட்டுள்ள நட்டத்தினை சரியாக கணிக்க முடியாவிடினும் தாம் மத்திய வங்கி ஆளுநராக இருந்துள்ளமையால் தமது கணிப்பின் பிரகாரம் வட்டிவீதம் அதிகரிக்கப்பட்டதால் மாத்திரம் 145 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டிருக்கும் என கணிக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில், மத்திய வங்கி பிணைமுறி ஊழல் குறித்து ஆளும் கட்சி உறுப்பினர் சாந்த பண்டார கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அதற்கு பதில் தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.