July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

காணாமல் போனோரின் உறவினர்கள் உட்பட வடக்கில் பல தரப்பினரையும் அமெரிக்கத் தூதுவர் சந்தித்தார்

Photo: Twitter/ U.S. Embassy Colombo

வடக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அந்தச் சந்திப்பு தொடர்பாக அமெரிக்கத் தூதுவர் தனது டுவிட்டர் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

“உங்கள் மகனையோ அல்லது கணவனையோ இழப்பதை கற்பனை செய்து பாருங்கள். இப்போது அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை ஒரு போதும் அறிய முடியாமல் இருப்பதை கற்பனை செய்து பாருங்கள். அந்த மனவலியைத் தான் காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்கள் அனுபவிக்கின்றார்கள். ஒரு பொறுப்புவாய்ந்த அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும்- இந்த விவகாரத்தில் அதன் சொந்த ஆணைக்குழுக்கள் அளித்த பரிந்துரைகளுக்கும் மதிப்பளித்தாக வேண்டும்” என்று அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வடக்கில் பல்வேறு நிகழ்வுகளிலும் அமெரிக்கத் தூதுவர் கலந்துகொண்டுள்ளார்.

வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட ஸ்மார் வகுப்பறை இன்று காலை அவரால் திறந்து வைக்கப்பட்டது.

அத்துடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் அமைந்துள்ள பரிசோதனை ஆய்வுகூடத்துக்கு பிசிஆர் இயந்திரத்தை கையளிக்கும் நிகழ்விலும் அவர் கலந்துகொண்டுள்ளார்.

யுஎஸ்எயிட் அமைப்பினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட பிசி.ஆர் இயந்திரத்தை கையளிக்கும் நிகழ்வு பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் இன்று மாலை நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் அந்த இயந்திரத்தை பல்கலைக்கழக துணைவேந்தரிடம் கையளித்துள்ளார்.

இந்நிகழ்வில், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதிஸ்வரன், யாழ். போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் எஸ். ஶ்ரீபவானந்தராஜா, யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர்கள், பீடாதிபதிகள் விரிவுரையாளர்கள், நிர்வாக அதிகாரிகள் உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.

This slideshow requires JavaScript.