May 24, 2025 16:33:24

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அரசாங்கம் ரஞ்சன் ராமநாயக்கவை சிறையில் மிக மோசமாக நடத்துகின்றது’: ஹரின்

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை சிறையில் உள்ள மலசலகூடங்களை சுத்தம் செய்ய பணித்துள்ளதாகவும் அவர் மிக மோசமாக நடத்தப்படுகின்றார் எனவும் எதிர்க்கட்சி உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ கவலை தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற பாராளுமன்றத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது, ரஞ்சன் ராமநாயக்கவை அரசாங்கம் அநியாயம் செய்கின்றதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் இன்று நாம் எதிர்க்கட்சியில் உள்ளோம், ஆனால் நாளை நாம் ஆட்சிக்கு வந்ததும் நாமும் இவ்வாறே செயற்பட்டால், இன்று ஆளும் கட்சியில் உள்ள எத்தனை பேர் சிறைக்கு செல்லவேண்டி வரும் என சிந்தித்துப்பாருங்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்தை அவமதித்ததை நாம் நியாயப்படுத்தவில்லை, அதேபோல் இவர்கள் அனைவரும் கள்ளர்கள் என அவர் கூறினாலும் யார் என நேரடியாக எவரையும் சுட்டிக்காட்டவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமல்ல எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் சிறையில் அடைக்கப்படுவதை நாம் விரும்பவில்லை. கொலை செய்திருந்தாலோ அல்லது, கொள்ளையில் ஈடுபட்டிருந்தாலோ அவர்களை தண்டிக்க வேண்டும், அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

ஆனால் எந்தவித குற்றமும் செய்யாது ரஞ்சன் ராமநாயக்கவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் எனவும் ஹரின் பெர்னாண்டோ இதன்போது தெரிவித்துள்ளார்.