முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது குற்றவியல் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை இன்று சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையிலேயே, இவ்விடயம் வெளியாகியுள்ளது.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இலங்கையின் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 269 பேர் உயிரிழந்ததோடு, 500 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
குறித்த தாக்குதல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த ஆணைக்குழுவின் அறிக்கையில், தாக்குதல் செயற்பாடு அல்லது தாக்குதலைத் தடுக்காமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது பொருத்தமான குற்றவியல் தண்டனைச் சட்டக் கோவையின் கீழும் நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராயுமாறு சட்டமா அதிபருக்கு பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.