(FilePhoto)
வடக்கு-கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிப் போராட்டம் மேற்கொண்டு வந்த உறவுகளில் இதுவரை 84 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்குக் கிழக்குப் பகுதிகளில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் வீதிகளிலிருந்து தமது போராட்டங்களை நீண்ட காலமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளையும் தமது பிள்ளைகளையும் தேடியலைந்து பல துன்பங்களுடன் வயோதிப ஓய்வு காலங்களில் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலைகளிலும் ஏனைய உறவுகளின் பாதுகாப்பிலும் இருந்து வருகின்றார்கள்.
இவ்வாறு தமது உறவுகளைத் தேடியலைந்து இதுவரை 84 உறவுகள் நோயினால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் மட்டும் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேசத்தின் தலையீடுகளை கோரியும் ஐக்கிய நாடுகள் தமது விடயங்களில் கவனம் செலுத்தி தீர்வுகளை பெற்றுத்தருமாறு கோரியும் உறவுகள் தமது போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, வவுனியா மறவன்குளம் பகுதியைச் சேர்ந்த தாமோதரம்பிள்ளை பேரின்பநாயகி (வயது 61) என்ற தாயார், இன்று (செவ்வாய்க்கிழமை) மரணமடைந்துள்ளார்.
இவரது மகன் தருமகுலநாதன் கடந்த 2000ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து காணாமலாக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அவரைத்தேடி வவுனியாவில் ஆயிரத்து 465 நாட்கள் சுழற்சிமுறைப் போராட்டத்திலும் குறித்த தாய் கலந்துகொண்டு தனது மகனை கண்டுபிடித்து தருமாறு போராடியிருந்தார்.
காணாமல்போன மகனை காணாமலேயே உயிரிழந்த தாய்க்கு, அவருடன் போராட்டம் நடத்தியிருந்த சக தாய்மார் இன்று வவுனியாவில் அஞ்சலி செலுத்தினர்.