July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தமிழ்த் தேசியப் பேரவைக்கு அனுமதி கோரி தமிழரசுக் கட்சி மத்திய செயற்குழுவுக்கு  கடிதம்

(FilePhoto)

10 தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒன்றாக செயற்படுவது தொடர்பில் கட்சின் முடிவை எதிர்வரும் 28ஆம் திகதி அறிவிக்க இலங்கைத் தமிழரசுக் கட்சி மத்திய செயற்குழுவிடம் அனுமதி கோரி அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் சி.வி.கே சிவஞானம் இன்று கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், ‘கடந்த 21 ஆம் திகதியன்று நடைபெற்ற பத்துக் கட்சிகளின் கூட்டத்தில், தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள பத்துக் கட்சிகளும் இணைந்து ஒரு தமிழ்த் தேசியப் பேரவையாக செயற்படுவது பற்றிய கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்தக் கட்சிகள் தமது தனித்துவத்தைப் பேணிக்கொண்டு தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக ஒருமித்த கருத்தில் செயற்படுவதே இதன் நோக்கம் எனவும் அந்தக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இது பற்றிய அனைத்துக் கட்சிகளின் கருத்துக்களையும் அறிந்து எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் தீர்மானிக்கலாம் என முடிவாகியுள்ளது.

எமது கட்சியைப் பொறுத்த வரையில் எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதன் முடிவு அறியத் தரப்படும் என எம்மால் தெரிவிக்கப்பட்டது.

எனவே, இதனை மத்திய செயற்குழுவின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கலாம் எனக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா மற்றும் பதில் பொதுச்செயலாளர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது’ எனவும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.