July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் விடயத்தில் விட்டுகொடுக்க மாட்டோம்’; கருணா அம்மான்

கல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்துவது சம்பந்தமான விடயத்தில் எதனையும் விட்டுகொடுக்க மாட்டோம் என்று தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்திற்கு நேற்று அபிவிருத்தி தொடர்பில் மேற்கொண்ட விஜயத்தின் பின்னர் விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தேர்தல் காலங்களில் மக்களுக்கு எம்மால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை தற்போது நிறைவேற்றி வருகின்றோம் எனவும் 600 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை முன்னிட்டு பனம் பொருள் உற்பத்தி தொடர்பில் ஒரு வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பித்துள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு இந்தவேலைத் திட்டத்தினூடாக கணவனை இழந்த பெண்கள் கூடுதலான பலன்களை அடைவார்கள். இது தவிர தலைநகரில் இரு வாரங்களாக அனைத்து அமைச்சுக்களுக்கும் சென்று அவர்களை சந்தித்து அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து குறைபாடுகளையும் எடுத்து கூறி பல வேலைத்திட்டங்களை கொண்டு வந்திருக்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்துவது சம்பந்தமாக அமைச்சர் சமல் ராஜபக்‌ஷவை சந்தித்து பிரதேச செயலக விடயம் தொடர்பான திட்டங்கள் அனைத்தும் அவரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

அவருடம் இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வாக்குறுதி அளித்துள்ளார். அதற்கான செயலணியையும் உடனடியாக ஏற்படுத்தி தருவதாக கூறி இருக்கின்றார்.

ஆகவே  ஒன்றினை கூற விரும்புகின்றோம். கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் விடயத்தில் ஒன்றையும் விட்டுகொடுக்க மாட்டோம், தொடர்ந்தும் இத்திட்டத்தில் எமது முயற்சி தொடரும் என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை விளையாட்டு துறை அமைச்சரின் ஆலோசனைக்கு இணங்க 300 விளையாட்டு மைதானங்களை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அம்பாறை மாவட்டத்திலும் 100 விளையாட்டு மைதானங்கள் புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.