
சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவை பாராளுமன்றத்திற்கு அழைப்பது தொடர்பாக உடனடியாக தன்னால் தீர்மானம் எடுக்க முடியாது என்று சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவை பாராளுமன்றத்திற்கு அழைத்துவர நடவடிக்கையெடுக்குமாறு கோரி எதிர்க்கட்சியினர் இன்று சபையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபட்ட நிலையிலேயே சபாநாயகர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
”ரஞ்சன் ராமநாயக்க விடயத்தில் என்னால் உடனடியாக தீர்மானம் எடுக்க முடியாது. அது நீதிமன்றத்துடன் தொடர்புடைய விடயமே, முறையான அறிவித்தல் வருமாக இருந்தால் அவரை பாராளுமன்றத்திற்கு அழைக்க நடவடிக்கையெடுப்பேன்” என்று சபாநாயகர் கூறியுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர்நீதிமன்றத்தினால் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து அவர் அக்குணுகொல பெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரின் பாராளுமன்ற ஆசனம் தொடர்பாக இப்போதே தீர்மானம் எடுக்க வேண்டாமென்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள போதும், அது குறித்து சபாநாயகர் கவனம் செலுத்தவில்லை என்று கூறியே இன்று எதிர்க்கட்சியினர் சபையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.