தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான தகவல்களை ‘டிக் டொக்’ சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வத்தளை பிரதேசத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் குறித்த நபர் கைது செய்யபபட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
25 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுளளதாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
முல்லைத்தீவை பிறப்பிடமாக கொண்ட, ஹட்டனில் வசித்துவந்த இந்த இளைஞன் ‘டிக் டொக்’ ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அந்த இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பான தகவல்களை பதிவேற்றி வந்த நிலையில் அது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்திருந்த பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் அவரை இன்று காலை கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரின் கைத்தொலைபேசியை பரிசோதித்த போது, விடுதலைப் புலிகள் தொடர்பான படங்களும், வீடியோக்களும் இருந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
சந்தேக நபரிடம் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.