
இலங்கையில் இறுதியாக இடம்பெற்ற ஆட்சி மாற்றமே நாட்டுக்கு ஆபத்தாக மாறியுள்ளது என்று முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடர் ஆரம்பமாகியுள்ளது. இந்தக் கூட்டத் தொடர் இலங்கைக்கு ஆபத்தானதாக இருக்கின்றது. புதிய பிரேரணையையும் இம்முறை இலங்கை எதிர்கொள்ளவுள்ளது.
இலங்கையில் இறுதியாக இடம்பெற்ற ஆட்சி மாற்றமே நாட்டுக்கு ஆபத்தாக மாறியுள்ளது. இந்த அரசு வெளிநாட்டுக் கொள்கைகளை உரிய வகையில் கையாளவில்லை. நட்பு நாடுகளைக் கூடப் பகைக்கும் வகையிலேயே இந்த அரசு செயற்படுகின்றது.
எனவே, ஜெனீவாவில் இலங்கைக்கு நட்பு நாடுகள் கூட ஆதரவு வழங்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
எமது நல்லாட்சியில் ஜெனீவா விவகாரத்தை,அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நாட்டுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் – வெளி அழுத்தங்கள் வராத வகையில் நாம் கையாண்டோம். ஆனால், அந்தச் செயற்றிறன் தற்போதைய அரசிடம் இல்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.