July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பிரேரணையை வெற்றிகொள்வதில் பிரித்தானியா உறுதியாக உள்ளது’

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரித்தானியா கொண்டுவரும் பிரேரணையை வெற்றிகொள்வதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் இது குறித்து பேரவையின் உறுப்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதாகவும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சேரா ஹல்டன் தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடம் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா இப்போது பிரேரணை ஒன்றினை கொண்டுவந்தாலும் அதனை நிறைவேற்றுவதில் சவால்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், எஸ்.ஸ்ரீதரன் ஆகியோர் பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சேரா ஹல்டனை கொழும்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன்,

ஜெனீவா கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், நடைமுறையில் உள்ள விவகாரங்கள் குறித்தும் பேசியிருந்தோம். குறிப்பாக தற்போது கூடியுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயங்களை மீண்டும் கையாளவுள்ள நிலையில் இம்முறை பிரித்தானியா தலைமையில் கொண்டுவரும் பிரேரணையில் இலங்கையின் பொறுப்புக்கூறலை கடுமையாக வலியுறுத்தும் விதத்தில் அமைதல் வேண்டும் என்பதையும் பிரித்தானியாவின் மேற்பார்வை தொடர்ந்தும் இருக்கக்கூடிய விதத்திலான பிரேரணையை கொண்டுவர வேண்டும் என்பதையும்வலியுறுத்தியுள்ளோம். அதேபோல் பிரேரணையை வெற்றிகொள்ள உறுப்பு நாடுகளை பிரித்தானியா வலியுறுத்தியுள்ளமைக்கு நாம் எமது நன்றிகளையும் தெரிவித்துள்ளோம்.

மேலும்,இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் பிரித்தானியா முன்னெடுக்கும் நகர்வுகளுக்கு பூரண ஒத்துழைப்புகளை கூட்டமைப்பு எப்போதும் வழங்கும் எனவும்,பிரித்தானியாவின் மேற்பார்வை கண்டிப்பாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.