July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கட்சி அரசியலில் ஈடுபட’ ஐனாதிபதி கோட்டாபய தயார் என்கின்றன பொது ஜன பெரமுன பங்காளிக் கட்சிகள்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து கட்சி அரசியலில் ஈடுபடுமாறு பங்காளிக் கட்சிகள் ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ள நிலையில் அதற்கு அவர் இணக்கம் தெரிவித்துள்ளதாக பங்காளிக்கட்சிகள் தெரிவித்துள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் ஜனதிபதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுடன்  மேற்கொண்ட பேச்சுவார்த்தையை அடுத்தே இவ் முடிவு எட்டப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதியின் தலைமைத்துவத்தை பலப்படுத்தும் வேலைத்திட்டத்தை பங்காளிக்கட்சிகள் முன்னெடுக்கும் எனவும் கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

கட்சியின் தலைமை பொறுப்பில் பிரதமர் மகிந்த  ராஜபக்‌ஷ உள்ள நிலையில் ஜனாதிபதி அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். அதுவே அரசியல் ரீதியில் அரசாங்கத்தை பாதுகாக்கும் என பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

எனினும் ஜனாதிபதி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமைத்துவத்தை எடுத்துக்கொள்வதா அல்லது மாற்று வழிமுறையை கையாள்வதா என்பது குறித்து தெளிவான நிலைப்பாடு எதனையும் பங்காளிக்கட்சிகள் தெரிவிக்காதுள்ளனர்.

அன்மையில் ஆளும் கட்சியின் பிரதான பதவியில்  ஜனாதிபதி  இருக்க வேண்டும் என்ற  கோரிக்கையை அமைச்சர் விமல் வீரவன்ச முன்வைத்திருந்தார். இதனையடுத்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஒரு சில உறுப்பினர்களுடன் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக  கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ கடந்த 2019 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில்  ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கி வெற்றிபெற்ற போதிலும் இன்றுவரை அவர் குறித்த கட்சியின் உறுப்புரிமையையோ அல்லது வேறெந்த கட்சியின் உறுப்புரிமையையோ பெற்றுக்கொள்ளவில்லை.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஜனாதிபதி ஒருவர் எந்தவொரு கட்சியின் உறுப்புரிமையையும் பெற்றுக்கொள்ளாது நாட்டினை நிர்வகிக்கும்  முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.