மனித உரிமைகள் பேரவையால் இலங்கையை ஒன்றும் செய்துவிட முடியாதென கருதி அரசாங்கம் கவனயீனமாக இருந்துவிடக்கூடாது என்று இலங்கை மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளரும், சட்டத்தரணியுமான பிரதீபா மஹநாமஹேவா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை அடிப்படையாக வைத்துக்கொண்டு இலங்கையை யுத்த குற்றச்சாட்டில் சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்லவே முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் மூலமாக மனித உரிமைகள் பேரவைக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதற்கமையவே ஐந்து நாடுகள் ஒன்றிணைந்து மனித உரிமைகள் உப குழுவில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை கொண்டுவருகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் விடுதலைப்புலிகளின் தேவையை நிறைவேற்றும் விதத்தில், மேற்கத்தேய நாடுகளின் தேவைக்காகவும், புலம்பெயர் அமைப்பு மற்றும் புலம்பெயர் தமிழர் பேரவையின் தேவைக்காகவும் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கான நடவடிக்கைகளை இங்கிருந்தே முன்னெடுத்து வருகின்றதுடன் இந்த முயற்சிகளின் பின்னணியில் அரசாங்கத்தை கவிழ்க்கும் சூழ்ச்சியொன்றும் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே தற்போது மனித உரிமைகள் பேரவையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் குறித்து வெளிவிவகார அமைச்சு 24 மணிநேரமும் விழிப்புடன் இருந்து கண்காணிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
இதேவேளை சீனாவும், கியூபாவும் பொறுப்பை தோலில் சுமந்துள்ளதாக தெரிய வருகின்றது. இலங்கை இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு சகல நாடுகளினதும் ஆதரவை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரதீபா மஹநாமஹேவா வலியுறுத்தியுள்ளார்.