பெருந்தோட்டங்கள் இந்தியாவுக்கோ அல்லது சீனாவுக்கோ விற்பனை செய்யப்படமாட்டாது என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
தலவாக்கலை ஹொலிரூட் தோட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற தீவிபத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 24 தனி வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத்தெரிவித்துள்ளார்.
இதன்போது ‘கடந்த அரசை விட மலையகத்துக்கான தனி வீட்டுத்திட்டங்கள் தற்போது உரிய முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வீட்டுக்கும் தலா 13 இலட்சம் ரூபா வீதம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்தியாவால் மலையகத்துக்கு 14 ஆயிரம் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. அந்நாட்டின் உதவியுடன் உட்கட்டமைப்பு வசதிகள் செய்துகொடுக்கப்பட்டதுடன் பாடசாலைகள் மேம்படுத்தப்பட்டன. தற்போது கொரோனா தடுப்பூசிகூட வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நன்மைகளை இந்தியா செய்யும்போது அது பற்றி எவரும் கதைப்பதில்லை. ஆனால் தோட்டங்களை இந்திய நிறுவனத்துக்கு வழங்குவதில் மாத்திரம் குறை காண்கின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெருந்தோட்டங்களை இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு வழங்கவுள்ளது, சீனாவுக்கு வழங்கப்படவுள்ளது என்று கூறுகின்றனர். அவ்வாறும் ஒருபோதும் நடைபெறாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கையின் உள்விவகாரங்களை வெளிநாடுகளுக்கு கொண்டுசெல்வது சரியில்லை. பிரச்சினைகளை இங்கு பேசி தீர்க்க வேண்டும். ஜெனிவா மாநாடு என்பதெல்லாம் வீண் பிரச்சினை எனவும் மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.