(FilePhoto)
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கை பக்கச்சார்பானது. எனவே இதனை நிராகரிப்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
46ஆவது ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடர் இன்றைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் பிரேரணை குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவிக்கும் விதமாக அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதன்போது இலங்கையின் உள்ளக விடயங்களில் தவறான கருத்து கணிப்புகள், தரவுகளை கொண்டே ஆணையாளர் ஒரு அறிக்கையை முன்வைத்துள்ளார்.
எனவே தவறான ஒரு பிரேரணையை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் விதமாக எமது நட்பு நாடுகளின் ஆதரவை கேட்டுள்ளோம்.
எவ்வாறெனினும் இந்த பிரேரணையை தோற்கடிக்க வேண்டும் என்ற முயற்சியில் நாம் ஈடுபட்டுள்ளோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேநேரம் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு வருகை தந்து நிலைமைகளை ஆராய்ந்தோ அல்லது எமது பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியோ தனக்கு கிடைத்த தரவுகள் உண்மையா என்பதை ஆராய்ந்துகூட பார்க்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை அரசாங்கம் தமது கண்டனங்களை தெரிவித்துள்ளதுடன், எழுத்து மூலமாக இந்த காரணிகளை வெளிவிவகார அமைச்சு அனுப்பி வைத்துள்ளது.