November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”பௌத்த சாசனத்திற்கு எதிராக நான் கதைக்கவில்லை”: மகா சங்கத்தினரின் குற்றச்சாட்டுக்கு நீதி அமைச்சர் பதில்

பௌத்த சாசனத்திற்கு எதிரான வகையில் எந்தக் கருத்தையும் தான் வெளியிடவில்லையெனவும், பௌத்த மகா சங்கத்தினரால் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாகவும் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

பௌத்த மகா சங்கத்தினரால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்துக் கூறும் போதே அலிசப்ரி இவ்வாறு கூறியுள்ளார்.

பெப்ரவரி 12 ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றியிருந்த நீதியமைச்சர் விகாரைகள் சட்டத்தை தனிப்பட்ட சட்டம் என்ற வகையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ள பௌத்த மகா சங்கத்தினர், விகாரைகள் சட்டம் அரசியலமைப்புக்கு உட்பட்டது எனவும், இதனால் நீதி அமைச்சரின் அந்தக் கருத்து பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளது என்றும் இதனால் இது தொடர்பாக நடவடிக்கையெடுக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டு ஜனாதிபதிக்கு கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளனர்.

அத்துடன் நீதி அமைச்சரின் குறித்த உரையை பாராளுமன்றத்தின் ஹன்சாட் பதிவில் இருந்து நீக்குமாறும் கோரி பௌத்த மகா சங்கத்தினரால் சபாநாயகருக்கும் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துக் கூறியுள்ள நீதி அமைச்சர், தான் பௌத்த சாசனத்தை அவமதிக்கும் வகையில் எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லையெனவும், தனது கருத்தை தவறாக புரிந்துகொண்டே அவர்கள் தன் மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளதாகவும் இதனால் அவர்களின் குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.