
ஐநா மனித உரிமைப் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் இன்று (22) ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது.
மார்ச் 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத் தொடரில் உலக நாடுகளின் மனித உரிமை நிலை குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.
இன்றைய முதல்நாள் அமர்வில் ஐநா செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரெஸ் மற்றும் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.
மனித உரிமை ஆணைாயாளரின் உரையின்போதும் இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பாகவும் குறிப்பிடப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை ஆரம்ப அமர்வில் பல்வேறு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் உரையாற்றவுள்ளனர்.
உலகளாவிய கொரோனா தொற்று நிலைமையால் வீடியோ தொழிநுட்பம் ஊடாகவே அனைவரும் அந்தக் கூட்டத் தொடரில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதன்படி இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன நாளை இலங்கை நேரப்படி இரவு 8 மணிக்கு அதில் உரையாற்றவுள்ளார்.
இதன்போது ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பாக மதிப்பீட்டு அறிக்கையை நிராகரித்து தினேஸ் குணவர்தன உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இம்முறை 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக பிரித்தானியா, கனடா உள்ளிட்ட 6 நாடுகளினால் மற்றுமொரு புதிய பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.
குறித்த பிரேரணை தொடர்பான அறிக்கை சில தினங்களுக்கு முன்னர் வெளியாகியிருந்த நிலையில் அதனையும் அந்த இலங்கை அரசாங்கம் நிராகரித்திருந்தது.
இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பாக 2015 ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசாங்கம் மனித உரிமைகள் பேரவையில் 30.1 பிரேரணைக்கு வழங்கியிருந்த இணை அனுசரணை தற்போதைய அரசாங்கத்தினால் நீக்கிக்கொள்ளப்பட்ட நிலையிலேயே இலங்கை தொடர்பாக பிரித்தானியா ஆகிய நாடுகள் இணைந்து புதிய பிரேரணையொன்றை கொண்டு வருவதற்கு திட்டமிட்டுள்ளன.
எவ்வாறாயினும் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானங்களுக்கு முகம்கொடுக்க அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது என்று வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.