November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

குப்பைத் தொட்டிக்குள் தவறுதலாக வீசப்பட்ட தங்க நகைகள்; மீண்டும் கிடைத்தன!

உள்ளூராட்சி மன்றத்தின் குப்பைத் தொட்டிக்குள் வீசப்பட்ட தங்க நகைகள் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டு உரிமையாளரிடம் சேர்ப்பிக்கப்பட்ட சம்பவம் ஒன்று அம்பாறை- சம்மாந்துறையில் நடந்துள்ளது.

சம்மாந்துறை சின்னப்பள்ளி பகுதியில் கடந்த சனிக்கிழமை திருமண நிகழ்வு நடந்த வீடொன்றில் 12 பவுன் தங்க நகைகள் காணாமல் போயுள்ளன.

வீடெங்கிலும் தேடியும் நகை கிடைக்காத நிலையில், ஒருவேளை வீட்டின் குப்பைத் தொட்டிக்குள் தவறுதலாக சென்றிருக்குமோ என்று உரிமையாளர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஆனால், அவ்வேளையில் உள்ளூராட்சி மன்ற கழிவகற்றும் பணியாளர்கள் ஏற்கனவே குப்பையை வழமைபோல் கொண்டு சென்றுவிட்டார்கள்.

குப்பைகளோடு கலந்து நகை காணாமல் போயிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்ட போதிலும், உடனடியாக சம்மாந்துறை பிரதேச சபை திண்மக் கழிவகற்றல் சேவையினருக்கு வீட்டின் உரிமையாளர் தகவல் கொடுத்துள்ளார்.

அவ்வேளையில் குறித்த கழிவுகள் சம்மாந்துறை பிரதேச சபையின் வங்களாவடி சேதனப் பசளை உற்பத்தி நிலையத்திற்கு வாகனத்தில் சென்று சேர்ந்திருந்தன.

தகவலறிந்த ஊழியர்கள் திண்மக் கழிவகற்றல் வாகனத்தில் சேகரிக்கப்பட்டிருந்த அனைத்து கழிவுப் பொதிகளையும் ஒவ்வொன்றாகப் பிரித்து நகையைத் தேடியுள்ளனர்.

அவர்களின் முயற்சி வீண் போகவில்லை; நகையை மீட்டு பத்திரமாக உரிமையாளரிடம் அவர்கள் ஒப்படைத்துள்ளனர்.

காணாமல்போன நகைகள் திரும்பிவந்ததால் மகிழ்ச்சியடைந்த உரிமையாளர், சிரமம் பாராது உதவிய உள்ளூராட்சி மன்ற அதிகாரிகளுக்கும் சேதனப் பசளை உற்பத்தி நிலைய ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இப்போது தங்கம் ஒரு பவுன் ஒரு லட்சம் ரூபாவுக்கும் அதிக விலைக்கு விற்பனையாகின்றமை குறிப்பிடத்தக்கது.