October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

’20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்’

அரசியல் அமைப்பின் 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்த முஸ்லிம் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் முஸ்லிம் மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டுமென ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம். ரி. ஹசன் அலி தெரிவித்தார்.

நிந்தவூரில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்;

முஸ்லிம் ஜனாஸாக்களை எரியூட்டுவதை முடிவுறுத்துவார்கள் என்று அரசாங்க தரப்பினர் பொய்யான வாக்குறுதியை வழங்கி ஏமாற்றி விட்டார்கள் என்று தற்போது தெரிவித்துள்ள முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்கள், அரசாங்கத்துக்கு ஆதரவாக கை உயர்த்தியமைக்காக கட்சித் தலைமையிடம் வெளிப்படையாக மன்னிப்புக் கோரியுள்ளனர்.

ஆயினும் அவர்கள் அனைவரும் கட்டாயம் முஸ்லிம் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோருதல் வேண்டும்.ஏனென்றால் இவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்திருப்பவர்கள் முஸ்லிம் மக்களே ஆவர்.அதுவும் அரசாங்கத்துக்கு எதிரான பிரசாரங்களை தேர்தல் மேடைகள் தோறும் கடுமையாக மேற்கொண்டே முஸ்லிம் மக்களின் வாக்குகளை இவர்கள் பெற்றுள்ளனர்.

அத்துடன், 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எம்.பிக்களும் அதற்கான காரணத்தை கட்டாயம் பகிரங்கப்படுத்த வேண்டும்.

மேலும் அரசாங்கம் திட்டமிட்டு ஏமாற்றிவிட்டதாக தெரிவிக்கின்ற முஸ்லிம் எம்.பிக்கள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக்கு அவர்களின் முறைப்பாடுகளை கையளிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.