January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுமந்திரனுக்கு வழங்கிய பாதுகாப்பை நீக்கியது ஏன்?; பொலிஸ்மா அதிபரிடம் சபாநாயகர் அறிக்கை கோரல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ள நிலையில், பாராளுமன்றத்திலும், கட்சி தலைவர் கூட்டத்திலும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பியுள்ள நிலையில், இது குறித்த அறிக்கை ஒன்றினை தனக்கு தருமாறு சபாநாயகர் பொலிஸ்மா அதிபருக்கு எழுத்துமூல கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை கட்சி தலைவர்கள் கூட்டம் இடம்பெற்ற நிலையில், கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் சுமந்திரன் எம்.பி.க்கு வழங்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படையினரை நீக்கியது ஏன் என்ற கேள்வி எதிர்க்கட்சி உறுப்பினர்களினால் எழுப்பப்பட்டிருந்தது.

இதற்கு முன்னர் பாராளுமன்றத்திலும் தொடர்ச்சியாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இது குறித்து கேள்வி எழுப்பிய வேளையில்,தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் விசேட பாதுகாப்பை நீக்கியமை குறித்து பொலிஸ்மா அதிபர் அறிக்கை ஒன்றினை தருமாறு கடந்த வெள்ளிக்கிழமை சபாநாயகர் கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.இது குறித்து பொலிஸ்மா அதிபரின் பதில் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.