நீதி அமைச்சர் அலி சப்ரி, பௌத்த விகாரைகள் சட்டமானது தனிநபர் சட்டம் என்று பெப்ரவரி 12 ஆம் திகதி பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பௌத்த மகா சங்கத்தினர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
11 தேரர்களின் கையெழுத்துடன் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ் வேண்டுகோளை அவர்கள் விடுத்துள்ளனர்.
அத்தோடு, அமைச்சரின் அறிக்கையை நாடாளுமன்றத்தின் ஹன்சார்ட்டிலிருந்து நீக்குமாறு கோரிக்கையை முன்வைத்து கடிதத்தின் பிரதி ஒன்றை சபாநாயகருக்கும் அனுப்பிவைத்துள்ளனர்.
சட்டக் கல்லூரியில் பரிந்துரைக்கப்பட்டுள்ள பேராசிரியர் எல்.ஜே.எம் கூரேயின் ‘இலங்கை நீதி முறைமையின் அறிமுகம்’ என்ற புத்தகத்தின் படி தனிநபர் சட்டத்தில் கண்டியச் சட்டம், தேசவழமை சட்டம் மற்றும் முஸ்லிம் சட்டம் மட்டுமே அடங்கும் என பௌத்த மகா சங்கத்தினர் தமது கடித்தில் குறிப்பிட்டுள்ளனர்.
கண்டியச் சட்டம் மற்றும் தேசவழமை சட்டம் ஆகியவை பிரதேச அடிப்படையானவை என்ற காரணத்தில், முஸ்லிம் சட்டம் மட்டுமே தனிநபர் சட்டம் என்ற நேரடி அர்த்தத்தை தருவதாக குறித்த கடிதத்தில் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில், பௌத்த விகாரைகள் சட்டம் அரசியலமைப்பின் 9 வது பிரிவின் கீழ் இருப்பதால், அது தனிநபர் சட்டமாகாது. எனவே நீதி அமைச்சரின் இந்த கருத்து புத்த சாசனவுக்கு எதிரானது என கூறியுள்ள பௌத்த மகா சங்கத்தினர் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.
இதேவேளை, நாட்டில் கண்டிய விவாக விவாகரத்து சட்டம், யாழ்ப்பாண விவாக தேச வழமைச் சட்டம், முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம், பௌத்த விகாரைகள் சட்டம், இந்து கலாசார சட்டம், முஸ்லிம் வக்கூப் சட்டம், Church of Ceylon சட்டம் போன்ற தனியார் சட்டங்கள் நடைமுறையில் உள்ள நிலையில், முஸ்லிம்களின் சட்டத்தை மாத்திரம் நீக்க வேண்டுமென்று கோசமிடுவது இன முரண்பாடுகளுக்கே கொண்டு செல்லும் என நீதியமைச்சர் அலி சப்ரி கடந்த 12 ஆம் திகதி பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.