ஐநா மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கை விடுதலைப் புலிகளை ‘தியாகிகளாக’ வர்ணிக்கும் தொனியில் எழுதப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் பிரபுகள் சபை எம்.பி. நேஸ்பி பிரபு தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் போராட்டத்தை ஒரு பயங்கரவாத நடவடிக்கை என்றும், அவர்கள் பல அரசியல் தலைவர்களையும் சிவில் சமூகத் தலைவர்களையும் படுகொலை செய்து, ஜனநாயக வழியில் தெரிவான இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக மோசமான வன்முறைகள் நிரம்பிய போர் ஒன்றைத் தொடுத்து தமிழ் சோசலிஸ அரசொன்றை அமைக்க முயன்றனர் என்றும் நேஸ்பி பிரபு குறிப்பிட்டுள்ளார்.
ஐநா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிஷேல் பச்சலேட்- இன் அலுவலகத்திற்கு நேரடியாக அனுப்பி வைத்துள்ள குறிப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஆணையாளர் மிஷேல் பச்சலேட்- இன் அறிக்கையில் இலங்கையில் நல்லிணக்கத்தை முன்னெடுப்பதற்கு ஏதுவான விடயம் எதுவும் இல்லை எனவும் நேஸ்பி பிரபு கடுமையாக சாடியுள்ளார்.
இறுதி யுத்தத்தின் போது 5000 முதல் 7000 வரையிலான அல்லது அதனை விடவும் குறைவான பொதுமக்களே கொல்லப்பட்டனர் என்பதற்கு சுயாதீனமாக நிரூபிக்கப்பட்ட பல ஆதாரங்கள் உள்ளதாகவும், ஐநா அறிக்கையில் சொல்லப்படுவது போல், 40,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்படவில்லை எனவும் நேஸ்பி பிரபு கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகள் சிறுவர்களை படையணியில் சேர்த்தமை உள்ளிட்ட மிக மோசமான யுத்தக் குற்றங்களை மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை புறக்கணித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் போது கொல்லப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களில் 60 வீதமானவர்கள் சிறுவர்கள் என யுனிசெப் தெரிவித்துள்ளதாகவும் அவரது குறிப்பு கூறுகின்றது.
சிறுவர்களை படையணியில் இணைப்பது, பயிற்சி வழங்குவது உட்பட பல நடவடிக்கைகளில் ஈடுபட்டவரான பிரித்தானியாவில் வாழும் அடேல் பாலசிங்கம் குறித்து ஐநா அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை எனவும் நேஸ்பி பிரபு விமர்சித்துள்ளார்.
அத்தோடு மனித உரிமை மீறல்கள் குறித்து ஆர்வம் காட்டும் பிரித்தானியா இந்த விடயம் குறித்து விசாரணை செய்யுமாறு ஏன் ஐநாவை கோரவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை அரசுக்கு நன்கு நெருக்கமானவராக அறியப்பட்ட நேஸ்பி பிரபு நீண்டகாலமாகவே இலங்கை அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டிலேயே கருத்துக்களை வெளியிட்டுவந்துள்ளார்.
ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்வைக்க பிரித்தானியா உள்ளிட்ட (Core Group) ஐந்து நாடுகள் தயாராகிவரும் நிலையில் நேஸ்பி பிரபுவின் இந்தக் கருத்து வந்துள்ளது.