அனைத்து தமிழ்க் கட்சிகளையும் இணைத்து தமிழ்த் தேசியப் பேரவை ஒன்றை உருவாக்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஒன்றிணைந்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியொன்றில் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டிருந்தன.
இதன்போது கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன், 10 கட்சிகள் கூடி தமிழ்த் தேசியப் பேரவையை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும், இதில் ஏனைய தமிழ்க் கட்சிகளையும் இணைத்துக்கொள்ள கலந்துரையாடல்களை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.
எதிர்வரும் 28 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மீண்டும் கூடி இந்த தமிழ் தேசிய பேரவை உருவாக்குவது பற்றிய இறுதி தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் உருவாக்கும் தமிழ்த் தேசிய பேரவை ஊடாக தமிழ் மக்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு காணக்கூடிய சாத்தியப்பாடான முடிவுகளை எடுக்க முடியுமாக இருக்குமென்றும் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இன்றைய கூட்டத்தில், தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும் ஐ.நா மனித உரிமைப் பேரவை தொடர்பாகவும் ஆராய்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.