இலங்கையில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மட்டுமே சீனா முன்னெடுக்கின்றது, மாறாக அவர்களின் இராணுவம் இங்கு குவிக்கப்படவில்லை. இதில் இந்தியா அச்சமடைய தேவையில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
வட-இலங்கையில் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ள எரிசக்தித் திட்டங்கள் தமக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நடவடிக்கை என இந்தியா அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் கொழும்பு தமிழ் வாராந்த பத்திரிகை ஒன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியில் அமைச்சர் சரத் வீரசேகர இதனை தெரிவித்துள்ளார்.
சீனாவுடன் நல்லதொரு நட்புறவில் உள்ளோம் என்பதற்காக இந்தியாவுடனான நட்புறவை முறித்துக்கொள்ளவில்லை, அவர்களுடனும் வர்த்தக, கலாச்சார ரீதியிலான உறவு பேணப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
ஆனால் இந்தியா இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிட முயற்சிகள் எடுத்தால் அதுவே உறவை முறிக்கவும் காரணமாக அமைந்துவிடும் எனவும் சரத் வீரசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
வெறுமனே தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நாட்டின் அபிவிருத்தியை கைவிட முடியாது என கூறியுள்ள அவர் நாடு பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைய இவ்வாறான தீர்மானங்கள் அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம் உள்ளிட்ட இலங்கையின் கடல் எல்லைகளை இலங்கை கடற்படையே பாதுகாக்கும். சீனாவினால் இலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் எதுவும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்தோடு, இலங்கை – இந்திய உறவு 13 ஆம் திருத்தத்தில் தங்கியிருக்கவில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.