July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”இந்தியாவின் அதானி நிறுவனத்திடம் பெருந்தோட்டங்களை கையளிக்கத் திட்டமிடப்படுகின்றதா?”

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு விடயத்தில் இடம்பெறும் இழுத்தடிப்புகளுக்கு பின்னால் பல்தேசிய கம்பனிகளின் தலையீடுகள் இருக்கின்றதா? என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளதாக பெருந்தோட்ட தொழிலாளர் ஊதிய உரிமைக்கான இயக்கம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு பெருந்தோட்டங்களை வழங்குவதற்காக களம் அமைத்துக்கொடுப்பதற்காக திட்டங்களும் இந்த இழுத்தடிப்புக்கு பின்னால் இருக்கலாம் என்று பெருந்தோட்ட தொழிலாளர் ஊதிய உரிமைக்கான இயக்கத்தின் செயற்பாட்டாளர் எஸ்.டி.கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்..

மஸ்கெலியாவில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

எஸ்.டி.கணேசலிங்கம்

900 ரூபா அடிப்படை சம்பளத்துடன் ஆயிரம் ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதற்கு சம்பள நிர்ணய சபையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ள போதும், அந்த சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள காணிகளை வெளிநாட்டு கம்பனிகளுக்கு வழங்குவதற்கான திட்டங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி சம்பள விடயத்தில் இடம்பெறும் இழுத்தடிப்புகளுக்கு பின்னால் பெருந்தோட்டங்களை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்கும் திட்டங்கள் இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மலையகத்திலுள்ள அரசியல் கட்சிகளை கொழும்பிலுள்ள இந்திய தூதுவர் தனித்தனியே சந்தித்து வருவதாகவும், அதானி நிறுவனத்துக்கு ஆதரவு வழங்குமாறு இதன்போது கோரப்பட்டிருக்கலாம் என்றும் எஸ்.டி.கணேசலிங்கம் கூறியுள்ளார்.