November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”தற்கொலை தாக்குதல்களை நடத்த சஹ்ரான் 15 பெண்களுக்கு பயிற்சி வழங்கியுள்ளார்”

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாகக் கருதப்படும் சஹ்ரான் ஹாசிம் 15 பெண்களை தற்கொலை குண்டுதாரிகளாக வழிநடத்தியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பிரதிப்பொலிஸ்மா அதிபரும் ஊடகப்பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சஹ்ரான் தலைமையில் இடம்பெற்ற அடிப்படைவாத போதனைகளில் கலந்துகொண்ட குற்றச்சாட்டில் மாவனெல்லைப் பகுதியைச் சேர்ந்த 24 வயதான யுவதியொருவர் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது அவர் உள்ளிட்ட 15 பெண்கள் சஹ்ரானின் போதனைகளில் கலந்துகொண்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த போதனைகளின் போது, சஹ்ரான் அந்தப் பெண்களை தற்கொலை குண்டுதாரிகளாக உருவாக்க முயற்சித்ததாகவும், அவர்கள் 15 பேரும் எந்த நேரத்திலும் தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தத் தயார் என உறுதிமொழி எடுத்ததாகவும், கைதாகிய குறித்த பெண் வாக்குமூலமளித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2018 ஆம் ஆண்டில் கத்தான்குடியில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளதுடன் இந்த வகுப்புகளில் 15 பெண்கள் பங்கேற்று வந்தமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை சஹ்ரானிடம் உறுதிமொழி எடுத்த பெண்களில் 5 பேர் சாய்ந்தமருது தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்துடன் 3 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன்,  வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை கைதான யுவதி உட்பட 7 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.