January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டைம்ஸின் சிறந்த செல்வாக்குமிக்க 100 நபர்களில் இலங்கைத் தமிழ்ப் பெண் மைத்திரேயி ராமகிருஷ்ணன்

15,000 போட்டியாளர்கள், ஆறு கட்ட தேர்வுகள் மற்றும் ஒரு முறை நேர்முகத் தேர்வு என அனைத்தையும் கடந்து ஹாலிவுட்டில் நெட்ப்ளிக்ஸு க்காக எடுக்கப்பட்ட தொடரில் நடித்து தன் தனித்தன்மையை வெளிப்படுத்தி இருக்கிறார் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட மைத்திரேயி ராமகிருஷ்ணன்.

இவரின் இந்தச் சாதனையை மேலும் பெருமைப்படுத்தும் விதமாக பிரபல அமெரிக்க இதழான டைம்ஸ் 2021 ஆம் ஆண்டின் செல்வாக்குமிக்க 100 நபர்களில் ஒருவராக மைத்திரேயி ராமகிருஷ்ணன் தேர்வாகியுள்ளார். இது உலகளவில் இலங்கை தமிழ் பெண்ணிற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும்.

18 வயதே நிரம்பிய இவர், கனடாவில் பள்ளி படிப்பை பயின்று வருகிறார். இவருடைய பெற்றோர்கள் கனடாவில் குடியேறிய ஈழத் தமிழர்கள்.

பிரபல நடிகையும் எழுத்தாளருமான மிண்டி கலிங் இயக்கிய நெட்ஃப்ளிக்ஸ் தொடர்தான் ‘நெவர் ஹேவ் ஐ எவர்’.
இத்தொடரில் சிறந்த நகைச்சுவை நடிகை என இயக்குனரால் பாராட்டை பெற்றுள்ளார்.

இது மிகப் பெரிய வெற்றியைப் பெற்று மைத்திரேயி ராமகிருஷ்ணனுக்கு உலகமெங்கிலும் இருந்து ரசிகர்களை பெருமளவில் பெற்றுத் தந்துள்ளது.

ஹாலிவுட்டை பொருத்தவரை முறையான நடிப்பு பயிற்சி இருந்தால் மட்டுமே உள்ளே நுழைய முடியும். அதிலும் தனித்தன்மை இருந்தால் மட்டுமே கதாபாத்திரத்தில் மிளிர முடியும்.

அந்த வகையில் பெரிதாக எவ்வித பயிற்சியும் எடுத்துக் கொள்ளாமலேயே இயல்பாக தன்னுடைய தனித்தன்மையை இந்த த் தொடரில் மைத்திரேயி நிரூபித்திருக்கிறார்.

அமெரிக்க இந்திய தமிழ்ப்பெண், ஆங்கிலேயர்கள் படிக்கும் உயர்நிலைப்பள்ளியில் எதிர்கொள்ளும் சவால்கள், தன்னை நிரூபிக்கப் பாடுபடுவது மற்றும் அந்தப் பெண்ணுக்குத் தாயார் ,நண்பர்கள் மூலம் ஏற்படும் பிரச்சினைகள்,அதிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அவள் என்ன செய்கிறாள் என்று போகிறது கதை.

தமிழ் ஆகச் சிறந்த மொழி. தமிழச்சி என்பதில் பெருமை கொள்கிறேன். தமிழுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. தான் வசிக்கும் கனடா நாட்டில் டொரன்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதில் தன்னாலான பங்களிப்பை தர தயாராக இருப்பதாகவும் மைத்திரேயி தெரிவித்தார்.

ஹாலிவுட்டில் ஆங்கில தொடரில் நடிப்பதால் தன் பெயரை மாற்றிக் கொள்ள தயாராக இல்லை என்றும் தமிழையும் ஈழத்தையும் ஒரு போதும் விட்டுக்கொடுக்கமாட்டேன் என்றும் தெளிவோடும் துணிவோடும் கூறும் மைத்ரேயி ராமகிருஷ்ணனுக்கு நாமும் நம் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வோம்.