
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான தகவல்களை மூடி மறைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றதா? என்ற சந்தேகம் தமக்கு ஏற்பட்டுள்ளதாக கொழும்புப் பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய ஆணைக்குழுவின் அறிக்கைகளை ஆராய்வதற்காக குழுவை அமைக்க வேண்டிய அவசியமில்லை என்றும், அவ்வாறு குழுவை அமைப்பது அதிலுள்ள முக்கிய விடயங்களை மறைப்பதற்காகவும் இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதலுக்கு இலக்கான நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியன் தேவாலயத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களினால் இன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போதே பேராயர் மெல்கம் ரஞ்சித் இவ்வாறு கூறியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையை உடனடியாக நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தி, சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுக்க வேண்டுமென்று அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தவர்கள் கோரிக்கை விடுத்தனர்
இதன்போது அங்கு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த பேராயர் மெல்கம் ரஞ்சித், தாக்குதலுடன் தொடர்புடைய சில விடயங்களை வெளிப்படுத்துவதற்கு அரசாங்கம் அச்சப்படுகின்றதா என சந்தேகிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் அது தொடர்பான விசாரணை அறிக்கையில் உள்ள எதனையும் மறைக்கக் கூடாது என்றே தாம் அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த விடயத்தில் நாட்டின் தலைவர்கள் முதுகெலும்புடன் செயற்படுவர் என்று எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ள பேராயர் மெல்கம் ரஞ்சித், இதில் தமக்கு நீதி கிடைக்காவிட்டால் சர்வதேச அமைப்புகளிடம் செல்ல தயராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.