இலங்கையின் பிரஜைகள் எவரும் இராணுவ மருத்துவமனைகளில் இருந்து தடுப்பூசி பெற்றுக்கொள்வதை மறுக்க மாட்டார்கள் என்றும் அவ்வாறு மறுப்பவர்கள் இலங்கையின் பிரஜைகளாக இருக்க முடியாது என்றும் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பு இராணுவ மருத்துவமனையில் வழங்கப்படும் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவ மருத்துவமனைகளில் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதா? இல்லையா? என்பதைத் தீர்மானிப்பது அவர்களது தனிப்பட்ட விடயம் என்றும் இலங்கை இராணுவம் அனைவரையும் ஒரே சமமாகப் பார்க்கின்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தலைவர்கள் இவ்வாறான நிலைப்பாட்டில் இருப்பது கவலை தருவதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய பகுதிகளில் உள்ள தமிழ் மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் தாம் தடுப்பூசிகளை வழங்கவுள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.