
இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் பேரவையில் கூட்டு நாடுகளால் (Core Group) முன்வைக்கப்படவுள்ள முதலாவது வரைபு இதுவரை நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் மிகவும் பலவீனமானது என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
குறித்த வரைபு வெளியிடுவதற்கு முன்பே இலங்கையின் சில தமிழ் அரசியல் கட்சிகளும், சிவில் சமூகமும் இணைந்து கடிதம் ஒன்றை மனித உரிமை ஆணையாளருக்கும் உறுப்பு நாடுகளிற்கும் அனுப்பியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
தகுந்த சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையிடம் இலங்கையை பாரப்படுத்துமாறும் நாட்டில் நடைபெறும் வன்முறைகளை கண்காணிப்பதற்காக ஐநா மனித உரிமைகள் பேரவையின் அலுவலகமொன்றை ஸ்தாபிக்க வேண்டும் எனவும் அதில் கோரப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.
இத்தோடு போர்க் குற்றங்களை விசாரிப்பதற்காகச் சர்வதேச சுயாதீன விசாரணை பொறிமுறை ஒன்றை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டிருந்ததாகவும் கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டினார்.
எனினும் இவ் வரைபில், பொறுப்புகூரல் என்ற விடயம் பெரிய அளவில் குறிப்பிடப்படவில்லை என தெரிவித்துள்ள அவர் சர்வதேச குற்றவியல் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற தேவை வலியுறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
ஆனால் துரதிஸ்டவசமாக குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கை தவிர்க்கப்பட்டுள்ளமையானது கடும் ஏமாற்றத்தை தருவதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.