திருகோணமலை எண்ணெய்க் குதங்களை இந்தியாவிடம் இருந்து மீளப் பெற்றுக்கொள்வதாக தான் ஒருபோதும் கூறவில்லை என்று அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைக்கு விளக்கமளிக்கும் போதே, அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தான் சிங்களத்தில் மேற்கொண்ட உரையொன்றை ஆங்கில ஊடகமொன்று தவறாக சித்தரித்ததன் காரணமாகவே இந்தக் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிடம் இருந்து எண்ணெய்க் குதங்கள் மீளப் பெறப்படுமா? என பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோது, ‘பைத்தியம்’ என்று மாத்திரம் பதிலளித்துள்ளார்.
எண்ணெய்க் குதங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பாக இந்திய தூதரகத்துடன் கலந்துரையாடியதாகவும், இலங்கை அரசாங்கத்துக்கு மீளப் பெறும் விடயம் தொடர்பாக எவ்வித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவும் இலங்கையும் ஒன்றிணைந்து எண்ணெய்க் குதங்களை அபிவிருத்தி செய்ய எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேநேரம், திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் தொடர்பான ஒப்பந்தம் இரத்துச் செய்யப்படவில்லை என்று இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.