January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜெனிவா: ‘இலங்கையில் நிலையான சமாதானத்துக்கு மேலும் நடவடிக்கைகள் தேவை’- கூட்டு நாடுகள்

இலங்கை உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்கும், நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும் மேலதிக நடவடிக்கைகள் தேவைப்படுகின்றதாக இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்னின்று கொண்டுவரும் (Core Group) பிரதான நாடுகள் தெரிவித்துள்ளன.

இலங்கை தொடர்பான தீர்மானத்தை கொண்டுவரும் பிரதான நாடுகளான கனடா, ஜேர்மனி, வட மசிடோனியா, மொன்டனீக்ரோ, மலாவி மற்றும் ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட நாடுகள் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உட்கட்டமைப்பு வசதிகள், கண்ணிவெடி அகற்றல், நிலங்களை மீள ஒப்படைத்தல், மீள்குடியேற்றம் போன்றவற்றில் இலங்கை அரசாங்கத்தின் அடைவுகளைப் பாராட்டியுள்ள கூட்டு நாடுகள், மேலதிக நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டியுள்ளன.

இலங்கையில் பொறுப்புடமை, நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு தாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாகவும் இந்த கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மனித உரிமைகள் பேரவைக்கான தயார்படுத்தல்களுக்காக இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்து தீர்வு காணப்படவேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளன.