July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“இலங்கை மீது சர்வதேசம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்”: மூத்த சர்வதேச பிரமுர்கள்

“இலங்கை அதன் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதன் சொந்த நீதி நிறுவனங்களை நாட முடியாத நிலையை உருவாக்கியுள்ளது” என்று மனித உரிமைகள் தொடர்பில் குரல்கொடுத்துவரும் உலகளாவிய மூத்த முக்கியஸ்தர்கள் குழுவொன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சர்வதேச சமூகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்தக் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஐநாவின் மனித உரிமைகள் ஆணையர் மிஷேல் பச்சலெட் இலங்கை தொடர்பில் அண்மையில் விடுத்திருந்த அறிக்கையின் பால் ஐநாவின் உறுப்பு நாடுகள் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் 20க்கும் மேற்பட்ட நிபுணர்களும் முன்னாள் அரச தலைவர்களும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஐநா மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கைப் படி, இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களின் பிரதிநிதிகளும் உலகளாவிய, எல்லைகள் கடந்த விசாரணை-அதிகாரத்தின் (நியாயாதிக்கத்தின்) கீழ் நீதியை நாடுவதற்கு சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.

குற்றமிழைத்தவர்கள் தண்டனைகளுக்கு உட்படாமல் இருப்பதை தடுப்பதற்கு இலங்கை எதிர்ப்புக்காட்டி வரும் சூழ்நிலையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போன்ற தற்போதுள்ள சர்வதேச விசாரணைப் பொறிமுறைகள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டுக்காட்டப்பட்டுள்ளது.

சர்வதேச சட்டத்தின் கீழ் குற்றமிழைத்தவர்கள் என நம்பகமான குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளோர் மீது தடைகளை அறிவிக்கவும் சிறப்புத் தூதர் ஒருவர் மூலமான உறுதியான கண்காணிப்பையும் அறிக்கையிடலையும் உறுதிப்படுத்தவும் மனித உரிமைகள் ஆணையர் முன்வைத்துள்ள பரிந்துரையை ஆதரிப்பதாகவும் குறித்த சமூகப் பிரமுகர்கள் குழு தெரிவித்துள்ளது.

அயர்லாந்தின் முன்னாள் ஜனாதிபதியும் ‘எல்டர்ஸ்’ (Elders) அமைப்பின் தலைவியுமான மேரி ரொபின்ஸன், கொலம்பியாவின் முன்னாள் ஜனாதிபதியும் நோபல் பரிசு வென்றவருமான ஹுவான் மனுவல் சந்தோஸ் ஆகியோரும் இந்த அறிக்கையில் கையொப்பமிட்டுள்ள முக்கிய 20 பிரமுகர்களில் அடங்குகின்றனர்.

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா உருவாக்கிய ‘எல்டர்ஸ்’ அமைப்பில் இப்போது முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர், தென்னாபிரிக்க நிறவெறிக்கு எதிராக போராடிய பேராயர் டெஸ்மன்ட் டூட்டு, ஐநாவின் முன்னாள் தலைமைச் செயலர் பான் க மூன் உள்ளிட்ட முதுபெரும் தலைவர்கள் பலர் இடம்பெற்றுள்ளனர்.

அத்தோடு 2006 ஆம் ஆண்டில் ஐநா மனித உரிமைகள் பேரவை நிறுவப்பட்டது முதல் ஆணையர்களாக பணியாற்றியவர்களான லூயிஸ் ஆர்பர், நவநீதம் பிள்ளை, செயித் ராஅத் அல் ஹுசைன் ஆகியோரும் தற்போதைய ஆணையரின் பரிந்துரைகளை வழிமொழிந்துள்ளனர்.

ஐநாவின் முன்னாள் துணைத் தலைமைச் செயலர் ஜன் எலியஸ்ஸன், இலங்கையில் ஐநாவின் செயற்பாடுகள் பற்றிய உள்ளக மீளாய்வுக்காக தலைமைச் செயலரால் 2012 இல் நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் சார்ல்ஸ் பெட்ரி, இலங்கையின் பொறுப்பேற்றல் தொடர்பில் 2011 இல் விசாரணை நடத்திய நிபுணர் குழுவின் தலைவர் மர்ஸுகி தருஸ்மன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் இந்த பகிரங்கக் கோரிக்கையில் கையொப்பமிட்டுள்ளனர்.