July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆயிரம் ரூபா சம்பள விவகாரம்: இன்றைய பேச்சுவார்த்தையில் முடிவுகள் எட்டப்படவில்லை

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பாக இன்று சம்பள நிர்ணய சபையில் நடைபெற்ற கூட்டம் இறுதி முடிவு எதுவும் எட்டப்படாது நிறைவடைந்துள்ளது.

பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் சார்பில் ஒருவரும் தொழிற்சங்கங்கள் சார்பில் 8 பேரும் கலந்துகொண்டிருந்த நிலையில், இன்றைய கூட்டத்தில் தீர்மானங்களை எடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் சார்பில் 8 பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ள போதும் அவர்களின் ஒருவர் மாத்திரம் கூட்டத்தில் கலந்துகொண்டமையினால் கூட்டத்தை ஒத்தி வைக்க நேர்ந்துள்ளதாக அதில் கலந்துகொண்டிருந்த தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 8 ஆம் திகதி சம்பள நிர்ணய சபையினருக்கும், பெருந்தோட்ட நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது, தோட்டத் தொழிலாளர்களுக்கு 900 ரூபா அடிப்படை சம்பளத்துடன் 100 முதல் 140 ரூபா வரையில் வழ்க்கைக் கொடுப்பனவு அடங்கலாக 1040 ரூபா வரையில் நாளாந்த சம்பளத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

அது தொடர்பான ஆட்சேபனைகளை முன்வைப்பதற்கான கால அவகாசம் கடந்த 15 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில், அது தொடர்பாக தீர்மானம் எடுப்பதற்காக இன்று சம்பள நிர்ணய சபையில் கூட்டம் நடைபெற்றது.

ஆனால் அங்கு இறுதித் தீர்மானம் எதனையும் எடுக்க முடியாத காரணத்தினால் கூட்டத்தை ஒத்தி வைக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.