July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஈஸ்டர் தாக்குதல்: விசாரணை அறிக்கைகளை ஆராயவென ஜனாதிபதி விசேட குழுவொன்றை நியமித்தார்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையையும் தேசிய பாதுகாப்பு தொடர்பான மேற்பார்வைக் குழுவின் அறிக்கையையும் ஆராய்வதற்கென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் சமல் ராஜபக்‌ஷ தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளதுடன், அதன் உறுப்பினர்களாக ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ, உதய கம்மன்பில, ரமேஷ் பத்திரன, பிரசன்ன ரணதுங்க மற்றும் ரோஹித அபேகுணவர்தன உள்ளிட்ட அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் குறித்த அறிக்கைகளில் உள்ள பரிந்துரைகளை ஆராய்ந்து அது தொடர்பாக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கையொன்றை ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளனர்.

அறிக்கையை மார்ச் 15 ஆம் திகதிக்கு முன்னர் தன்னிடம் கையளிக்குமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவினர் கடந்த முதலாம் திகதி தமது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்திருந்ததுடன், மேலும் சம்பவம் தொடர்பாக ஆராய்ந்த தேசிய பாதுகாப்பு தொடர்பான மேற்பார்வைக் குழுவின் அறிக்கையும் அண்மையில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.