January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையின் கிழக்கு கடல் பகுதியில் 4.0 ரிச்டர் அளவில் நிலஅதிர்வு

அம்பாறை பொத்துவில் கடற்கரையை அண்டிய பிரதேசங்களில் இன்று 4.0 ரிச்டர் அளவிலான நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட அனர்த்த இடர் முகாமைத்துவ நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது.

அம்பாறையில் இருந்து 14 கடல் மைல் தூரத்தில் கடலில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.

பொத்துவில் சர்வோதயபுரம், சின்னஊறணி, ஜலால்தீன்சதுக்கம், களப்புகட்டு பிரதேசங்களில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன் சுமார் 2 முதல் 3 நிமிடங்கள் வரை உணரப்பட்டதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தால் எந்தவித சேதங்களும் ஏற்படவில்லை என அனர்த்த இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் நிலஅதிர்வு ஏற்பட்ட பிரதேசங்களிலுள்ள மக்கள் சுனாமி அபாயம் குறித்து பதற்றமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 2009 ஆம் ஆண்டு 4.5 ரிச்டர் அளவில் பதிவாகிய நிலநடுக்கத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக தற்போது இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.