
இலங்கையில் அன்மைகாலமாக வாகன விபத்துகள் அதிகரித்து வருவதையடுத்து, தவறிழைக்கும் சாரதிகளின் அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்வதற்கான புள்ளியிடல் நடைமுறையை கூடிய விரைவில் அமுல்படுத்த உள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
ஒரே தினத்தில் நாடளாவிய ரீதியில் 15 பேர் விபத்துகள் காரணமாக உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர் 40க்கும் மேற்பட்டோர் நாளொன்றில் பலத்த காயங்களுக்கு உள்ளாவதாகவும் குறிப்பிட்டார்.
சாரதிகளின் அனுமதிப் பத்திரங்களுக்கு புள்ளிகளை வழங்கும் முறையை அமுல் படுத்துவதன் மூலமாக விபத்துகளைக் குறைக்க முடியும் எனவும் பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
இவ் திட்டம் தொடர்பில் ஏற்கனவே பரிட்சார்த்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் இதனை செயற்படுத்துவது தற்போது அவசியமாகி உள்ளது என்றார்.
போக்குவரத்து ஒழுக்க விதிகளை மீறும் சாரதிகளுக்கு இத்திட்டத்திற்கு அமைய புள்ளிகள் வழங்கப்படுவதுடன் அவர்களின் சாரதி அனுமதி பத்திரம் குற்றத்துக்கு ஏற்றவகையில் இரத்து செய்யப்படவோ இடைநிறுத்தப்படவோ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.