கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தைப் போன்று மேற்கு முனையம் தொடர்பாகவும் போராட்டங்களை நடத்துவதற்கு துறைமுக தொழிற்சங்கள் தீர்மானித்துள்ளன.
போராட்டங்கள் தொடர்பாக ஏற்கனவே ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக அகில இலங்கை துறைமுக ஊழியர் சங்கத்தின் செயலாளர் நிரோஷன் ஹொரகானகே தெரிவித்துள்ளார்.
இந்திய நிறுவனத்திற்கு கிழக்கு முனையத்தை வழங்குவதற்கு ஆரம்பத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு தொழிற்சங்கங்களும், அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு வெளியிட்டதை தொடர்ந்து அந்தத் தீர்மானத்தை அரசாங்கம் கைவிட்டிருந்தது.
இதனை தொடர்ந்து மேற்கு முனையத்தை இந்தியா மற்றும் ஜப்பான் நிறுவனங்களுக்கு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக வழங்குவதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
எவ்வாறாயினும் மேற்கு முனையத்தையும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு இடமளிக்க முடியாது என்று துறைமுக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
கிழக்கு முனையத்தை போன்று மேற்கு முனையமும் முழுமையாக இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழே இருக்க வேண்டுமெனவும் இதனால் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அதனை கையளிக்க முடியாது என்றும் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
அவ்வாறு மேற்கு முனையத்தை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படுமா இருந்தால் அதற்கு எதிராக முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து தற்போது தொழிற்சங்கள் கூடி கலந்துரையாடி வருவதாக அகில இலங்கை துறைமுக ஊழியர் சங்கத்தின் செயலாளர் நிரோஷன் ஹொரகானகே தெரிவித்துள்ளார்.