
சுவிஸ் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள தமிழ் மக்களை உடனே நாட்டுக்குத் திருப்பி அனுப்பக் கூடாது என இலங்கைக்கான சுவிசர்லாந்து தூதுவரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கைக்கான புதிய சுவிசர்லாந்து தூதுவர் டொமினிக் ஃபேர்கலர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் யாழ்ப்பாணம் தனியார் விடுதியொன்றில் இடம்பெற்றது.
இதன்போது, சுவிஸ் நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள தமிழர்களை உடனே திருப்பி அனுப்பக் கூடாது என்பதற்கான எழுத்து மூல கடிதமொன்றை கூட்டமைப்பினர் சுவிஸ் தூதுவரிடம் கையளித்துள்ளனர்.
அதேநேரம் கடிதத்தைப் பெற்றுக்கொண்ட தூதுவர், தமிழ் மக்களை திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகளை கடந்த ஒன்றரை வருடங்களாக நாங்கள் கையாளவில்லை எனவும் தற்போது அவ்வாறான எண்ணம் எமக்கு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு இந்தக்கலந்துரையாடலில் ஜெனிவாவில் கொண்டுவரப்பட இருக்கும் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் முக்கியமாக 47 நாடுகளின் நிலைப்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
மேலும் 30/1, 34/1, 40/1 தீர்மானங்களுக்கு மேலதிகமாக தற்போது கொண்டுவரப்படும் தீர்மானம் இலங்கைக்கு என்ன படிப்பினை கொடுக்கும் அல்லது எவ்வாறு இலங்கைக்கு அழுத்தத்தை கொடுக்கும் என்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
தொல்பொருள் திணைக்களங்களின் ஊடான நில அபகரிப்புகள், வனவள திணைக்களத்தின் ஊடான நில ஆக்கிரமிப்புக்கள், அரசாங்கத்தினுடைய மத்திய அமைச்சின் கீழ் இருக்கின்ற நிறுவனங்களை வைத்து மக்களின் நிலங்களை மட்டும் அல்லாது அவர்களின் இருப்புக்களையும் இலங்கை அரசாங்கம் கேள்விக்குறியாக்குவது தொடர்பான விடயங்களும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், சார்ல்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.