November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘கந்தசாமியின் வங்கிக் கணக்கில் ஒரு லட்சம் கோடி ரூபாய்’; கைப்பற்ற முயன்ற கும்பல் சிக்கியது!

வவுனியா கூமாங்குளம், நெளுக்குளத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவரை கொழும்பில் இருந்து வந்து கடத்திச் செல்ல முயன்ற கும்பல் ஒன்றை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காந்தசாமி என அடையாளம் காணப்பட்ட குறித்த இளைஞரின் வங்கிக் கணக்குக்கு சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் ( 1 ட்ரில்லியன் ரூபாய்) பணம் அமெரிக்காவிலிருந்து வைப்புச்  செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பணம் ஒரு குறிப்பிட்ட அமைப்புக்கு அனுப்பப்பட இருந்த நிலையில், வைப்பிலிட்டவரின் விபரத்தை வழங்க கந்தசாமி தவறியதால், இலங்கை மத்திய வங்கி பணத்தை பரிமாற்றம் செய்ய மறுத்துவிட்டது.

இளைஞர் ஒருவரின் வங்கிக் கணக்கில் திடீரென பெருந்தொகை பணம் வைப்பிலிடப்பட்டுள்ள செய்தியும், மத்திய வங்கியும் புலனாய்வு அதிகாரிகளும் அது தொடர்பில் உசாரடைந்து விசாரணை நடத்திவரும் செய்தியும் கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டுவருகின்றன.

இந்நிலையில் இந்தப் பணம் தொடர்பான பரிவர்த்தனை பற்றி அறிந்த கும்பல், கந்தசாமியின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை திரும்பப் பெற தாங்கள் உதவி செய்வதாக கூறி, தங்களுடன் வருமாறு அவரை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றுள்ளது.

இந்நிலையில், கடத்தல்காரர்களால் அழைத்துச் செல்லப்பட்டபோது சந்தேகமடைந்த கந்தசாமி, வாகனத்திலிருந்து இறங்கி சம்பவம் குறித்து பூவரசங்குளம் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.

அதனைத்தொடர்ந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு வவுனியா தலைமை நீதவான் முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கடத்தலில் ஈடுபட்ட சந்தேகநபர்களை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கந்தசாமியை கடத்தி அவரிடமிருந்து பணத்தை பறிப்பதே குறித்த கும்பலின் நோக்கம் எனவும், சிறைச்சாலை அதிகாரி ஒருவருடன் பெண் ஒருவரே குறித்த கும்பலை வழிநடத்தியுள்ளதாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.