
இலங்கை அரசாங்கம் அமைத்துள்ள ‘அரசியல் பழிவாங்கல்’ தொடர்பான ஆணைக்குழு நீதியை நிந்தனை செய்யும் நடவடிக்கை என தெரிவித்துள்ள மனித உரிமை ஆர்வலர் கலாநிதி ராதிகா குமாரசாமி, சட்டத்தின் ஆட்சியின் மீதும் மக்களிற்கான நீதி மீதும் நம்பிக்கை கொண்டுள்ளவர்களுக்கு இது ஒரு பயங்கரமான நிலையாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
வீடியோ மூலமான உரையாடலொன்றில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
”அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழு குறித்தும் விசேட விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழு குறித்தும் சில விடயங்களை நான் கூற விரும்புகின்றேன்.
நீதிமன்றங்களில் தற்போது நடைபெறும் வழக்குகள் சிலவற்றை கைவிடுமாறு அரசியல் பழிவாங்கல் குறித்த ஆணைக்குழு வேண்டுகோள் விடுக்கின்றது.
உலக வரலாற்றில் ஆணைக்குழுக்கள் இவ்வாறான வேண்டுகோளை விடுத்தது இதுவே முதல்தடவை.
இதன் காரணமாக லசந்த விக்கிரமதுங்க படுகொலை வழக்கு, பிரகீத் எக்னெலிகொட வழக்கு, வசந்த கரணாகொட வழக்கு ஆகியவற்றில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள்.
இது முற்றிலும் வழமைக்கு மாறான ஒரு விடயம்.
அதேபோல், அரசியல் பழிவாங்கல் ஆணைக்குழு குறித்த வழக்குகளின் குற்றவாளிகளை விடுவிக்கபோகின்றது. பொலிஸ் அதிகாரிகள், அரச அதிகாரிகளை போலியான ஆதாரங்களை உருவாக்கியமைக்காக நீதி நடவடிக்கைகளிற்கு உட்படுத்துமாறும் அது கேட்டுக்கொள்கின்றது.
இவை சர்வதேச கவனத்தை ஈர்த்த மிக முக்கியமான வழக்குகள்.
தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படுதல் என்பது எங்கள் சட்டத்தின் ஆட்சிக்கு முரணானதாகும்.
அடுத்ததாக, அரசியல் தலைவர்களின் சிவில் உரிமையை பறிப்பதற்காக விசேட ஜனாதிபதி ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. இது 1977 இல் திருமதி பண்டாரநாயக்கவிற்கு நடைபெற்றதை போன்றது.
மகிந்த ராஜபக்ச உறுப்பினராகயிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சிவில் சமூகத்துடன் இணைந்து அன்று அந்த ஆணைக்குழுவிற்கு எதிராக கிளர்ந்தெழுந்து ஒரே குரலில் பேசியது.
பேராயர் லக்ஸ்மன் விக்கிரமசிங்க ஜனநாயகத்தை அழிக்கவேண்டாம் என மன்றாடும் தனது பிரபலமான கடிதத்தை ஜே.ஆர்.க்கு எழுதியிருந்தார்.
எங்களின் தற்போதைய அரசியல் பழிவாங்கல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவும் விசேட விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவும் நீதியை பரிகாசம் செய்யும் நடவடிக்கையாகும்.”