இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பிணை முறி மோசடி தொடர்பான வழக்கை விசாரிக்க இரண்டு ‘மூவரடங்கிய நீதிபதி-குழுக்களை’ பிரதம நீதியரசர் நியமித்துள்ளார்.
மேல் நீதிமன்ற நீதிபதிகளான டி.தொடவத்த, மஞ்சுள திலகரத்ன மற்றும் எம் .இர்ஸடீன் ஆகியோர் முதலாவது குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டாவது குழுவில், மேல்நீதிமன்ற நீதிபதிகளான அமல் ரணராஜா, நாமல் பலல்லே மற்றும் ஆதித்ய படபெந்திகே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளரான அரசதரப்பு சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
‘நல்லாட்சி’ அரசாங்கத்தில் நிதியமைச்சராக பணியாற்றிய ரவி கருணாநாயக்க மற்றும் பேர்ப்பச்சுவல் ட்ரெஷரீஸ் (Perpetual Treasuries) நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கின் விசாரணைக்கு ‘மூவர்-குழாத்தை’ நியமிக்குமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா சில நாட்களுக்கு முன்னர் கோரிக்கை விடுத்திருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2015 இல் மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்ட அர்ஜுன மகேந்திரனின் மருமகனான அர்ஜுன் அலோசியஸ் 2018 இல் கைது செய்யப்பட்டார்.
அர்ஜுன் அலோசியஸின் நிறுவனத்திற்கு உதவியதன் மூலம் பிணை முறி மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மீதும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எனினும், தற்போது சிங்கப்பூரில் வசிப்பதாக நம்பப்படும் அர்ஜுன மகேந்திரன் தன் மீதான பிணை முறி மோசடிக் குற்றச்சாட்டை மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.